வெள்ளைக் கோழி
அவன் விரைவாக பள்ளியை
விட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தான். கோழிகளை மேய்க்க கூட்டி போக வேண்டும்.
இப்போதெல்லாம் அவனுக்கு அதுதான் மிகவும் பிடித்த வேலையாக இருக்கிறது. தார் ரோடு
வழியாக வரக்கூடாது என அம்மா கண்டிப்பாக சொல்லி இருக்கிறாள். ஒத்தைக் காலில்
நிற்ககூடாது. இரவானால் விசில் ஊதக்கூடாது. இவன் எது செய்தாலும் அவளுக்கு
பிடிப்பதில்லை. ரோடில் நடந்து சென்றால் பேருந்துகளை வேடிக்கை பார்க்கலாம்.
முருகனருள் பஸ் போயிருக்கும். தென்னந்தோப்பு வழியாக வருவது இவனுக்கு அறவே
பிடிக்கவில்லை. நாற்றம் குமட்டிக் கொண்டு வந்தது. மழைக்காலங்களில் கால் வைக்க
முடியாது. நாய்கள் வேறு செத்து கேட்ட நாத்தம் அடித்துக் கொண்டிருக்கும். பல முறை
வாந்தி எடுத்து இருக்கிறான். ரோடு வழியாக நடந்து வந்து குறுக்கு வழியில் அம்மா
பார்க்கும் முன்பு வீட்டுக்கு போகலாம். அந்த சங்கரு பையன் அம்மாகிட்ட சொல்லி அடி
வாங்கி வைப்பான். இந்த ஊரில் யாரையுமே அவனுக்கு பிடிக்கவில்லை. அம்மா அவனை
அடிக்கிறாள். அப்பா வந்தால் முதல் வேலையாக இவன் சொன்ன பேச்சை கேட்பதில்லை என்று
கூறி அடி வாங்க வைப்பாள். தாத்தா வீட்டில் இவனை யாரும் அடித்ததில்லை. இவன்தான்
தாத்தாவையும் பாட்டியையும் உதைப்பான். அவர்கள் சிரித்துக் கொண்டே அள்ளிக்
கொள்வார்கள். அவனைப் பார்த்துக்கொள்ள பெண்கள் போட்டி போடுவார்கள். அங்கே மாடுகள்
நிறைய இருந்தன. கன்று குட்டிகளுடன் விளையாடுவது, பால் கறந்ததும் அப்படியே பச்சை
பாலை குடிப்பது போன்றவை அவனுடைய விழையாட்டுக்கள். தாத்தா கண்ணன் வெண்ணை தின்றதை
பார்க்கும் பக்தனை போல பூரிப்பூடன் பார்த்துக் கொண்டிருப்பார். இந்த ஊருக்கு
வந்ததில் இருந்து பாலையே அவன் பார்க்கவில்லை. தயிர் சோறு கேட்டால் சோற்றில் நீரை
ஊற்றி உப்பை போட்டு பிசைந்து தருகிறாள். இரவில் களி தின்ன சொல்கிறாள். வீடுகள்
எல்லாமே பக்கம் பக்கமாக இருக்கின்றன. ராத்திரியில் யாரவது குடித்துவிட்டு சண்டை
போடுகிறார்கள். மழை பெய்தால் பயமாக இருக்கிறது அவனுக்கு. தென்னை மரங்களுக்கு நடுவே
வீடு கட்டி இருக்கிறார்கள். காத்து அடித்து மேல விழுந்தால் வீடு நசுங்கி விடும்
என்றும் பயம் கொள்வான். தாத்தா வீடு பெரியது. இரவானால் எல்லாரும் வீட்டு வாசலில்
கூடி ஊர்க்கதைகளை பேசுவார்கள். இங்கே இரவானால் தென்னை மரங்கள் பயங்கரமான இருளை
கொண்டு வந்து விடுகின்றன. இந்த சங்கரு பையன் எப்ப பார்த்தாலும் அவனை பற்றி கோள்
மூட்டி அடி வாங்க வைத்து விடுகின்றான். அவனை பார்த்தாலே பிடிக்கவில்லை.
சங்கருக்கு படிக்கவே தெரியவில்லை.
வாத்தியார் சண்முகம் எப்படி நல்லா படிக்கிறான் நீ முள்ளு வெட்ட தாண்டா போக போறன்னு
சொல்லி அடிப்பாரு. அதுக்காகத்தான் அவன் அம்மாக்கிட்ட சொல்லி அடி வாங்கி
வைக்கிறான்னு நினைத்தான். எல்லா விளையாட்டிலும் இவனை தோற்கடித்து அழ
வைக்கிறார்கள். கோட்டி பில்லி விளையாட்டில் இவனை ரொம்ப தூரம் நொண்ட வைத்தார்கள்.
இவன் விளையாடவே போவதில்லை. கோழி குஞ்சுகள் அவனுக்கு நல்ல துணையாக இருந்தன. அம்மா
உடனே ஒன்றும் வாங்கி தந்து விடவில்லை. இங்கே எவ்வளவு நேரம் அழுதாலும் யாரும் வந்து
கேட்பதில்லை. அழுதாலும் அம்மா அவள் பாட்டுக்கு ஏதாவது செய்து கொண்டிருப்பாள். அன்னிக்கு
என்னமோ கேட்டதும் வாங்கி கொடுத்து விட்டாள். மாயவன் வீட்டு வழியாக ஒருவன்
சைக்கிளில் கூடையை வைத்துக்கொண்டு “ கோழி குஞ்சேய்” என கூவியபடி வந்து கொண்டிருந்தான். குட்டிப்புள்ள கூடையை திறக்கச்சொல்லி
பார்த்தாள். பல வண்ணங்களில் கோழி குஞ்சுகள் இருந்தன. தாத்தா வீட்டில் இப்படி பல வண்ணங்களில் கோழி குஞ்சுகள்
இருந்ததில்லை. ரோஸ் நிற கோழி குஞ்சுகளை வாங்கினால் நல்லா இருக்கும் என நினைத்து
கொண்டான். சைக்கிள்காரன் இவன் வீட்டு வழியாக சென்றுதான் மெயின் ரோட்டுக்கு போக
வேண்டும். ஓடி வீட்டுக்கு சென்று அம்மாவிடம் நச்சரித்தான். அப்பா டூட்டில இருந்து
வந்ததும் வாங்கி தரேன் என்று சொன்னாள். அப்பன் ராத்திரிக்குத்தான் வருவாரு
அதுக்குள்ள கோழி குஞ்சி போயிருமே என்று அழ ஆரம்பித்தான். ரோஸ் கலர் குஞ்சுதான் வேணும்னு
அடம் பிடிச்சி வாங்கினான். அம்மா ஒரு கோழிக்குஞ்சு போதும் என்றாள். கோழி குஞ்சு விற்பவன் ரெண்டு
இருந்தாதான் குஞ்சுங்க நல்லா வளரும்
இல்லன்னா சீக்கிரம் செத்து போய்டும் என்றான். ரெண்டு குஞ்சுகளும் ரோஸ் கலரில்
வேண்டும் என வாங்கி கையில் வைத்தான். குஞ்சுகள் சூடாக, வெந்த வாசனையுடன் இருந்தன.
கூடையில் உள்ளே குஞ்சுகளை விட்டு கவிழ்த்து வைத்தான். அம்மா உடைந்த அரிசியை
கொடுத்து போடச் சொன்னாள். குஞ்சுகள் கத்தும் சத்தம் இனிமையாக இருந்தது. இரவில் அவை
தூங்குகிறதா என்று ஒரு நாள் கூடையை திறந்து பார்த்தான். கால்களை மடக்கி உடலை
மண்ணுக்கு கொடுத்து தூங்கிக் கொண்டிருந்தன. மாயவன் கரையான்களை கோழி குஞ்சுகளுக்கு
தின்ன கொடுக்க வேண்டும் என்றான். அரிசி மட்டும் போதாது என்றான். அவன் கரையானை
இதற்கு முன் பார்த்ததில்லை. புற்றில் கரையான் இருக்கும் என்று கேள்வி
பட்டிருக்கிறான். அம்மாவிடம் சொன்ன போது கோபமாக திட்டினாள். அங்கயெல்லாம் பாம்பு
அதுவும் நாகப் பாம்பு இருக்கும். போகக் கூடாது என்று கூறி நொய்யரிசியை போடச் சொன்னாள். மாயவன் அவனிடம்
கரையான்தான் நல்ல சத்து இல்லைன்னா குட்டிப்புள்ள கோழி குஞ்சிங்க செத்த மாதிரி
உன்னுதும் செத்து போய்டும் என்றான். கரையான எங்க பிடிக்கிறது என்றதும்
தென்னந்தோப்பில் தென்னை ஓலைகள், பன்னாடைகள் அடியில் இருக்கும் என்றான் மாயவன். சரி
போய் கரையான பிடிச்சிட்டு வரன் என்றதும் மாயவன் சிரித்தான். அது சின்ன எறும்பு
மாதிரிடா, நாம எடுத்துட்டு வர முடியாது. கோழி குஞ்சுங்கள எடுத்துனு
போயி மேய்க்கணும். கரையான் தென்னந்தோப்பில இருக்கும் என்றான். கோழி
குஞ்சுங்களுக்கு கரையான் போடுவது குறித்தே அவன் சிந்தனை இருந்தது. அட்டத்தில் ஒரு
மூங்கில் கூடை கைப்பிடியுடன் இருந்ததை பார்த்து அம்மாவை எடுத்து தரச் சொன்னான். அதனுள்
கோழி குஞ்சுகளை அதனுள் விட்டு மூடினான். ஒரு சின்ன குச்சியை கையில்
எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வடக்குப் புறமாக இருந்த தோப்புக்குள் நடந்தான். மழை
பெய்து, தென்னை ஓலைகள் மட்கும் வாசனை வந்தது. இந்த ஊரில் இவனுக்கு பிடிக்காத வாசனை
இதுதான். ஓலைகளை எடுத்து திருப்பி பார்த்தான். கருப்பாக மக்கிய ஓலைகளில்
கரையான்கள் இருக்கவில்லை. பெரிய பூச்சிகள் தான் இருந்தன. குஞ்சுகள் அதனை கொத்தி
தின்ன முடியாது என்று அவன் முடிவு செய்தான். இன்னும் கொஞ்சம் மேல் தோப்புக்கு
நடந்தான். ஒரு இடத்தில் ஓலையின் மேல் செம்மண் படர்ந்து இருந்தது. அதை தூக்கி
பார்த்தான். சிகப்பு தலைகளுடன் கண்ணாடி போன்ற உடல்களுடன் சிறிய பூச்சிகள் மேய்ந்து
கொண்டிருந்தன. கையில் எடுத்து பார்த்தான். அவை எறும்புகளை போலவே கடித்தன. உதறி
விட்டு குஞ்சுகளை கூடையில் இருந்து எடுத்து ஓலையை தூக்கிய அடிப்பகுதியில்
விட்டான். குஞ்சுகள் இன்று உற்சாகமாக
இருப்பதாக அவனுக்கு தெரிந்தது. குஞ்சுகள் கரையானை கொத்தி விழுங்கும் போது
ஆர்வமுடன் பார்த்தான். கரையானை கொத்தி அண்ணாந்து முழுங்கின. வயிறு பெரியது ஆனது
மாதிரி தெரிந்ததும் குஞ்சுகளைப் பிடித்து கூடைக்குள் வைத்து மூடி வீட்டுக்கு
கிளம்பினான். அம்மா போனதும் திட்டினாள். மொதல்ல கை கால நல்லா கழுவுடா அப்புறம்
வீட்டுக்குள்ள வா என்றாள். அன்றிரவு கோழிக்குஞ்சுகள் சந்தோசமாக கத்துவதாக அவனுக்கு
தோன்றியது. மறு நாளில் இருந்து பள்ளி விட்டதும் கரையான் மேய்ப்பது அவனுக்கு
பிடித்த வேலையாகிவிட்டது. இப்போதெல்லாம் அவன் கூடையை பயன்படுத்துவதில்லை. கோழி
கூண்டை திறந்து அவன் நடக்க ஆரம்பித்தால் அவன் பின்னாடியே வர பழகி இருந்தன.
எல்லாரும் அவனை பார்த்து ஆச்சரியமாக விசாரித்தார்கள். பருந்து எதுவும் தூக்கிட்டு
போகல, வெள்ளக்கோழி இவ்வளவு பெரிசாகற வரைக்கும் வளர்றது ஆச்சரியம் என்றார்கள்.
தனியாக நடக்க பயமாக
இருந்ததது. காற்று வருவதை பார்த்தால் மழை வரும் போல் தெரிகிறது. ஒரே ஓட்டமாக
ஓடினான். அம்மா அவனிடம் கை கழுவிட்டு வந்து சாப்டுடா என்றாள். சோறு மஞ்சளாக
இருந்தது. கோழி சாறு டா உன் அத்திக்காரி வந்து இருக்கா என்றாள். சாறும் மஞ்சளாக
இருந்தது. அவனுக்கு பிடிக்கவே இல்லை. எலும்புகள் மட்டும் கிடைத்தன. என்னா கலர் சாறு இது? நம்ம ஊட்டுல செய்யற மாறி
இல்லையே? என்றான். உன் அத்தியே சாறு செஞ்சாடா என்றாள் அம்மா. கையை கழுவிட்டு கோழி கூண்டை திறக்க
போனான். கோழி கூண்டு எங்க ? என்றான். அம்மா உள்ளே இருந்து குஞ்சுங்கள பருந்து
தூக்கினு போயடுசிடா என்றாள். ஓடி தென்னை மரத்தின் அடியில் பார்த்தான். வெண்ணிற
இறகுகள் தரையில் கிடந்தன. தீ வைத்த அடையாளம் தெரிந்தது. நெஞ்சு கரிப்பது போலவும்
வாந்தி வருவது போலவும் தெரிந்தது. நான் கிட்டி கடைக்கு வெளயாட போறன்னு சொல்லிட்டு
அம்மாவின் பதிலை எதிர் பார்க்காமல் ஓடினான்.